திங்கள், 14 ஜூன், 2010

குற்றாலத்தில் சீசன் "ஜோர்"




குற்றாலம் : குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்தால் சீசன் களைகட்டியது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் புதுமைபெற்ற ஸ்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. பொதிகை மலை சாரல் என்றாலே குற்றாலம் தான் நினைவிற்கு வரும். இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து சீசன் களைகட்டிவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூன் மாத இறுதியில் தான் சீசன் துவங்கியது.

ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத துவக்கத்திலேயே சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சீசன் துவங்கிய முதல் வாரத்திலேயே அருவிகளில் தண்ணீர் அதிகமாக விழத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீரின் அளவு சற்று கூடியது. இதனால் இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நேற்று காலை முதல் சீரான காற்றும், சாரல் மழையும் பெய்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு ஒருதடவை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ஐந்தருவி பகுதியில் வெயிலே தெரியாத அளவிற்கு கருமேக கூட்டங்கள் ஒன்றுதிரண்டு திடீர் திடீரென சாரல் மழையை பொழிந்தது. இப்பகுதியில் பலத்த காற்று வீசியது.

ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக