திங்கள், 26 ஏப்ரல், 2010

கோப்பை வென்றது சென்னை கிங்ஸ்

கோப்பை வென்றது சென்னை கிங்ஸ் :


ஐ.பி.எல்., பரபரப்பான பைனலில் சுரேஷ் ரெய்னாவின் சூப்பர் ஆட்டம் கைகொடுக்க, சென்னை கிங்ஸ் அணி கோப்பை கைப்பற்றி அசத்தியது. சச்சின் களமிறங்கியும் 22 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் தேடியது.

இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

சச்சின் பங்கேற்பு: வலது கை விரல் பகுதியில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது மும்பை கேப்டன் சச்சின் பங்கேற்றார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி எதிர்பார்த்தது போல பேட்டிங் தேர்வு செய்தார்.

மந்தமான துவக்கம்: சென்னை அணிக்கு ஹைடன், முரளி விஜய் இணைந்து மந்தமான துவக்கம் தந்தனர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் ஹைடன் திணற, 4 ரன் தான் எடுக்க முடிந்தது. அடுத்த ஓவரில் மலிங்கா 2 ரன் தான் கொடுத்தார். பின் ஹர்பஜன் பந்தில் ஹைடன் ஒரு சிக்சர் அடித்து நிம்மதி தேடினார். மறுபக்கம் ஜாகிர் பந்தில் முரளி விஜய் ஒரு சிக்சர் அடித்தார். பெர்ணான்டோ வேகத்தில் விஜய்(26) அவுட்டானார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் ஹைடன்(17) வீழ்ந்தார். பெர்ணான்டோ பந்தில் பத்ரிநாத்தும்(14) அவுட்டாக, சென்னை அணி 11.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

அதிவேக அரைசதம்: இதற்கு பின் தோனி, சுரேஷ் ரெய்னா இணைந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய இவர்கள் ரன் மழை பொழிந்தனர். மும்பை அணி மோசமாக பீல்டிங் செய்ய, இரு முறை கண்டம் தப்பிய ரெய்னா கலக்கினார். ஜாகிர் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். பின் போலார்டு ஓவரில் 2 சூப்பர் சிக்சர் விளாசிய இவர், ஐ.பி.எல்., அரங்கில் 9வது அரைசதம் அடித்தார். 24 பந்துகளில் 50 ரன்களை எடுத்த இவர், ஐ.பி.எல்., பைனல்களில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார். போலார்டு பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த தோனி 22 ரன்களுக்கு வெளியேறினார். மார்கல் 15 ரன் எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, ஐ.பி.எல்., பைனல்களில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ரெய்னா 57 (3 பவுண்டரி, 3 சிக்சர்), அனிருதா ஸ்ரீகாந்த் 6 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

விக்கெட் மடமட: சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. போலிஞ்சர் வேகத்தில் ஷிகர் தவான் 'டக்' அவுட்டானார். பின் சச்சின், அபிஷேக் நாயர் இணைந்து பொறுப்பாக ஆடினர். மார்கல் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார் சச்சின். மறுமுனையில் ஜகாதி சுழலில் அபிஷேக் வரிசையாக இரண்டு சிக்சர் அடிக்க, ஆட்டத்தில் சூடு பிடித்தது. இந்த நேரத்தில் ரெய்னா வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரட்டை 'அடி' விழுந்தது. தோனியின் துல்லிய 'த்ரோவில்' முதலில் அபிஷேக்(27) ரன் அவுட்டானார். 6வது பந்தில் ஹர்பஜன்(1) அவுட்டானார்.

ஜகாதி அசத்தல்: பின் ஜகாதி வீசிய 15வது ஓவர் திருப்புமுனை ஏற்படுத்தியது. இரண்டாவது பந்தை சச்சின்(48) தூக்கி அடிக்க, முரளி விஜய் 'லபக்' செய்ய, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 5வது பந்தில் ரெய்னாவின் சூப்பர் 'கேட்ச்சில்' சவுரப் திவாரி(0) நடையை கட்டினார். முரளிதரன் சுழலில் டுமினி(6) காலியானார்.

போலார்டு மிரட்டல்: கடைசி கட்டத்தில் வாணவேடிக்கை காட்டினார் போலார்டு. இவர், போலிஞ்சர் வீசிய 18வது ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி சேர்த்து 22 ரன்கள் எடுக்க, போட்டியில் 'டென்ஷன்' ஏற்பட்டது. ராயுடு(21) ரன் அவுட்டானார். மார்கல் பந்தில் ஹைடனிடம் 'கேட்ச்' கொடுத்து போலார்டு(27) வெளியேற, சென்னை அணியின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. போலிஞ்சர் துல்லியமாக பந்துவீச, 4 ரன்களே எடுக்க முடிந்தது. மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி அடைய, உள்ளூர் ரசிகர்கள் சோகமடைந்தனர். 22 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற சென்னை அணி மூன்றாவது ஐ.பி.எல்., கோப்பையை சூப்பராக கைப்பற்றியது.ஆல்-ரவுண்டராக அசத்திய சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். தொடர் நாயகன் விருதை சச்சின் வென்றார்.

சபாஷ் தோனி : நேற்றைய பைனலில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன்முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்று சாதித்தது. கடந்த 2008ல் நடந்த பைனலில் சென்னை அணி, ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது. கடந்த 2007ல் இந்திய அணிக்கு
'டுவென்டி-20' உலக கோப்பை பெற்றுத்தந்த தோனி, நேற்று சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கோப்பை பெற்றுத்தந்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

அதிவேக அரைசதம் : சென்னை வீரர் ரெய்னா, 35 பந்தில் 57 ரன்கள் எடுத்ததன்மூலம், ஐ.பி.எல்., அரங்கின் பைனலில் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக ராஜஸ்தான் அணியின் யூசுப் பதான் 56 ரன்கள் (எதிர்-சென்னை, 2008) எடுத்திருந்தார். தவிர, ஐ.பி.எல்., பைனலில் அதிவேக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார் ரெய்னா. இவர் 24 பந்தில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.

சூப்பர் ஜோடி : சென்னை அணிக்கு ரெய்னா- தோனி கைகொடுத்தனர். இவர்கள் நான்காவது விக்கெட்டுக்கு 35 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அதிரடியாக ரன் சேர்க்க, முதல் 10 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்திருந்த சென்னை அணி, அடுத்த 10 ஓவர்களில் 110 ரன்கள் குவித்தது.

பீல்டிங் சொதப்பல் : மும்பை அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. ரெய்னா 14 ரன் எடுத்திருந்த போது ஜாகிர் பந்தை தூக்கி எடுத்தார். இதனை பிடிக்க பெர்ணான்டோ, அபிஷேக் நாயர் ஓடி வந்து வாய்ப்பை வீணாக்கினர். அடுத்து கைக்கு வந்த 'கேட்ச்சை' ஜாகிர் நழுவ விட்டார். அப்போது 28 ரன் எடுத்திருந்த ரெய்னா, பின் அரைசதம் கடந்து அசத்தினார்.

ஹைடன் வீண் : சென்னை வீரர் ஹைடன் ஆமைவேகத்தில் ஆடி வெறுப்பேற்றினார். ஹர்பஜன் சுழலில் ஒரு முறை எல்.பி.டபியுள்யு., ஆக தெரிந்தார். ஆனால், அம்பயர் ரூடி குயர்ட்சன் தயவில் தப்பினார். இதற்கு பின்பும் சுதாரித்துக் கொள்ளாத இவர் 31 பந்துகளில் வெறும் 17 ரன்களுக்கு(54.83 ஸ்டிரைக் ரேட்) அவுட்டாகி ஏமாற்றினார். பின் முரளிதரன் பந்தில் அபிஷேக் நாயர் கொடுத்த 'கேட்ச்சையும்' நழுவ விட்டார்.

இதுவே அதிகம் : நேற்று, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்த சென்னை அணி, ஐ.பி.எல்., அரங்கின் பைனலில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2008ல் நடந்த பைனலில், ராஜஸ்தான் அணி 164 ரன்கள் (எதிர்-சென்னை) எடுத்தது.

முதல் இந்திய கேப்டன் : நேற்றைய பைனலில் சென்னை அணி வெற்றி பெற்றதன்மூலம், ஐ.பி.எல்., கோப்பை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வார்ன் (2008, ராஜஸ்தான்), கில்கிறிஸ்ட் (2009, டெக்கான்) கோப்பை வென்றனர்.

சச்சின் முதலிடம் : நேற்றைய பைனலில் 48 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின், மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில், முதலிடம் பிடித்தார். இவர் 15 போட்டியில் 5 அரைசதம் உட்பட 618 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இவர் 'ஆரஞ்சு' நிற தொப்பியை தன்வசப்படுத்திக் கொண்டார். இவரை தொடர்ந்து காலிஸ் (572 ரன், பெங்களூரு), ரெய்னா (520 ரன், சென்னை), கங்குலி (493 ரன், கோல்கட்டா), முரளி விஜய் (458 ரன், சென்னை) ஆகியோர் உள்ளனர்.