சனி, 1 மே, 2010

சச்சின் பெயரில் புது மாம்பழம்!

மாம்பழ "சீசன்' துவங்கி விட்டது. மார்க்கெட்டில் மல்கோவா, சப்போட்டா உள்ளிட்ட நிறைய வகைகளை காணலாம். இந்த ஆண்டு புதிதாக சச்சின் பெயரில் மாம்பழம் வருகிறது. இவர், விலைமதிப்பில்லாத வீரர் என்பதால், இந்த மாம்பழம் விற்பனைக்கு கிடையாதாம்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு அங்கீகாரமாக குவாலியர் மைதானத்தின் ஒரு பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா பெயர்:
இந்த வரிசையில் தனது புதுவகையான மாம்பழத்துக்கு சச்சின் பெயரை வைத்துள்ளார் உ.பி.,யை சேர்ந்த வயதான விவசாயி கலிமுல்லா கான். இவரை மலிகாபாத் பகுதியில் "மாம்பழ ராஜா' என்றே அழைக்கின்றனர். இது வரை 300 வகையான மாம்பழ வகைகளை உருவாக்கியுள்ள இவர், நாட்டின் உயர்ந்த பத்மஸ்ரீ விருது வென்றுள்ளார். இவருக்கு கிரிக்கெட் தவிர, பாலிவுட் நட்சத்திரங்களையும் பிடிக்கும். இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் ஒரு மாம்பழம் மற்றும் கொய்யாப் பழங்களை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து கலிமுல்லா கூறியது:
உலகில் சச்சினை போன்ற சிறந்த வீரர் யாரும் இல்லை. இதனால் தான் புதுவகையான மாம்பழத்துக்கு அவரது பெயரை வைத்தேன். சாசா மற்றும் அமின் வகைகளை கலந்து உருவாக்கியுள்ளேன். இது மிகவும் ருசியாக இருக்கும். கிரிக்கெட் அரங்கின் சூப்பர் "ஹீரோவான' சச்சின், விலைமதிப்பில்லாத வீரர். அவர் ஒன்றும் விற்கும் பொளுளல்ல. இதனால், அவரது பெயரிலான மாம்பழத்தை விற்பனைக்கு தரப் போவதில்லை.
அழகான ஐஸ்வர்யா பெயரில் மாம்பழம் மட்டும் போதாது. இதனால் தான் கொய்யாப்பழமும் உருவாக்கினேன். இரண்டுமே நல்ல சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். ஜூன் மாதம், மாம்பழமாக மாறியதும், மும்பைக்கு சென்று சச்சின் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு பரிசாக அளிப்பேன். இந்த வகை மாமரத்தை சச்சினுக்கு அன்பளிப்பாக வழங்கவும் உள்ளேன். என்னால் பயணம் செய்ய முடியாத பட்சத்தில், எனது மகனை அனுப்பி வைப்பேன்.
இவ்வாறு கலிமுல்லா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக